செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 மே 2022 (15:04 IST)

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
இலங்கை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (12) இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றினால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைகளையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
இதன்படி, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராட்ச்சி, ரோஹித்த அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த, சஞ்ஜிவ எதிரிமான, காஞ்சன ஜயரத்ன, சம்பத் அத்துகோரல, ரேணுக பெரேரா, மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட 17 பேருக்கே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன்னிற்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையுத்தரவை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் கடவூச்சீட்டுக்களை நீதிமன்றத்தின் பொறுப்பிற்கு எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.