பசியோடு இருந்த 120 நாய்களை கொண்டு உறவினரை கொன்றார் வடகொரிய அதிபர்?
வட கொரிய அதிபரின் உறவினர் ஒருவர் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்த குற்றத்திற்காக அண்மையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன்னின் உறவினரான ஜாங் சாங் தேக், அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார்.
இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார்.அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.இவர்களுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் மிகவும் அதிர்ச்சிகரமான தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், 120 நாய்களை மூன்று நாட்களுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்திருந்ததாகவும், அதன்பின் ஜாங் சாங் தேக் மற்றும் அவரது உதவியாளர்களின் ஆடைகளை களைந்து அந்நாய்களிடம் விடப்பட்டதாகவும், அந்த 120 நாய்களும் 6 பேரையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடித்து குதறி கொன்று சாப்பிட்டதை வட கொரிய அதிபர் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளது.