வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. மகளிர் தினம்
Written By Sasikala

மகளிர் தினம் முதன்முதலில் எப்போது கொண்டாடப்பட்டது...?

உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் மாறி, இன்று கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும்  அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் அது மிகையில்லை.
 
1857ஆம் ஆண்டு நியூயார்கில் உழைக்கும் பெண்கள் ஒன்று கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908ல் வாக்குரிமை  கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார்.

போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910-ல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
 
இந்த அமைப்பின் சார்பில் 1911-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
 
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8-ம் தேதியை நினைவு கூரும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
 
ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்  என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை  வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. வாழ்க பெண்கள், வளரட்டும் பெண்மை.