பண்டிகை காலத்தில் கண்டிப்பாக இடம்பெறும் வடை, பாயாசம்...


Sasikala|
தமிழ் நாட்டில் எந்த பண்டிகைகளாக இருந்தாலும், திருமண விழாக்களிலும் முதலில் இடம் பெறுவது வடை, பாயாசம்தான். அவற்றில் பலவகைகள் உண்டு. அவற்றுள் நாம் பருப்பு பாயசம், தட்டைப் பயறு வடை எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்....
 
1. பருப்பு பாயசம்
 
தேவையானவை:
 
கடலைப்பருப்பு - ஒரு கப்
ஜவ்வரிசி - கால் கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கேற்ப
திராட்சை - தேவைக்கேற்ப
தேங்காய் துண்டுகள் - தேவைக்கேற்ப
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
 
செய்முறை: 
 
கடலைப் பருப்பை குக்கரில் வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை தனியே வேக வைக்கவும். முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.  
 
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து, மசித்த கடலைப்பருப்பு, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, வேக வைத்த ஜவ்வரிசி, ஏலக்காய்த்தூள், சிட்டிகை உப்பு, முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் சேர்த்து, கொதி வரும்போது சுக்குப்பொடி, தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி இறக்கினால்... பருப்பு பாயசம் ரெடி.

 
 
2. தட்டைப் பயறு வடை
 
தேவையானவை:
 
வெள்ளை தட்டைப் பயறு - ஒரு கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
சீரகம் - கால் டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - பொரிக்க தேவயான அளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை: 
 
தட்டைப் பயறை 6 மணி நேரம் ஊற விடவும். நீரை வடித்துவிட்டு உப்பு, பச்சை மிளகாய், சீரகம், தோல் சீவிய இஞ்சி, புதினா சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :