1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:17 IST)

பிரபஞ்சன் மரணம் - சக எழுத்தாளர்கள் இரங்கல்

மறைந்த முன்னாள் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு சக எழுத்தாளர்கள் முகநூலில் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழின் முக்கிய எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் புற்றுநோய் பாதிப்பால் கடந்த ஓராண்டாக உடல் நிலை நலிவுற்று இருந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு சக எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யமுனா ராஜேந்திரன்
பிரபஞ்சனை நினவுகூர எனக்கு என்றும் மறக்கவியலாத காரணம் என ஒன்று உண்டு. அவர் புதுச்சேரியிலிருந்து எழுபதுகளில் நடத்திய ‘வண்ணங்கள்’ இதழில்தான் எனது 8-10 வரிக் கவிதை ஒன்று வெளியானது. அதுவே அச்சிதழில் வெளியான எனது முதல் எழுத்து. ‘அசுரவித்துக்கள்’ என அதன் தலைப்புகூட இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. பிரபஞ்சன் இதழுடன் வாழ்த்துப் போஸ்ட் கார்டு எழுதியனுப்பியிருந்தார். சோடனைகள் இல்லாத எளிய மனிதர். தோற்றம், எழுத்து என இரண்டிலும் காந்தி போல எமது தந்தையர் போல என்றும் எம்முடன் உடன் வருபவர். அந்தச் சொல்லின் எல்லாப் பொருளுடனும் பிரபஞ்சன் ஒரு செவ்வியல் மனிதர்..


பவா செல்லதுரை
நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்து மணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள்.
பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயேத் தற்காலிகமாக தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து,
“இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒரு பெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து.
“அப்படி ஒரு பொய்யான இமேஜ்ஜை நான் வெறுக்கிறேன் பவா, நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியேத் தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது.


போகன் சங்கர்
பிரபஞ்சன் மறைந்தார்.எழுத்திலும் நேரிலும் தமிழின் மிகப்பெரிய ஸ்டைலிஸ்ட்.என்னுடைய கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் சிறுகதைத் தொகுப்பு பற்றி பேசியிருக்கிறார்.மிகுந்த நேர்மறையான மனிதர்.நேர்மறையான வாழ்க்கை நோக்கு கொண்ட எழுத்தாளர்களுக்கு நிகழும் ஆழமின்மை என்ற விபத்தில் சிக்கிக் கொள்ளாதவர்.தனிப்பட்ட மனிதர்களின் அக தரிசனங்களையும் ஒரு கால கட்டத்தின் விரிந்த தரிசனத்தையும் போக்கையும் ஒருசேர எழுதத் தெரிந்த மிகச் சிலருள் ஒருவர்.
பிரபஞ்சன் எழுத்துக்கள் மூலமாக மானுடம் இன்னொரு முறை எழுந்தது.
வணக்கங்கள்

வாசுகி பாஸ்கர்

இந்த பிரபஞ்சம் நிச்சயம் இன்னொரு பிரபஞ்சனை ஈடு செய்யவே முடியாது.
எழுதுவதை கடைபிடிக்கும் படைப்பாளன் பிரபஞ்சன் காலமானார், வார்த்தைகளில்லை, கடக்க முடியாத நிலை