பியார் பிரேமா காதல்: கச்சிதமான காதல் படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் என்பதும், யுவனின் தயாரிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதும் இந்த படத்தின் சிறப்பு. இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஹிட்டானதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது. எதிர்பார்ப்பை படக்குழுவினர் பூர்த்தி செய்தார்களா? என்பதை பார்ப்போம்
ஹரிஷ் தனது பக்கத்து அலுவலகத்தில் வேலைபார்க்கும் ரைசாவை உள்ளுக்குள்ளேயே காதலிக்கின்றார். ஒருநாள் திடீரென அவருடைய அலுவகத்திலேயே வேலைக்கு வரும் ரைசா, அவருக்கு பக்கத்து சீட்டிலேயே உட்காருகிறார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ரைசாவை நெருங்கி நட்பாகிறார். இதனிடையே ஒருநாள் இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு ரைசாவின் வீட்டில் இருவரும் தங்குகின்றனர். அப்போது இருவருக்கும் இடையே செக்ஸ் உறவு ஏற்பட்டுவிடுகிறது. அதன் பின்னர் பதட்டமடையும் ஹரிஷ், உடனே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார். ஆனால் அதற்கு ரைசா கூறிய பதில்தான் இந்த படத்தின் திருப்புமுனை. அதன்பின்னர் இருவருக்கும் இடையே பல கருத்துவேறுபாடுகள், ஈகோ, சின்னச்சின்ன சண்டை என வந்து ஒரு கட்டத்தில் ஹரிஷூக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் என்ற நிலையும் வந்துவிடுகிறது. அந்த சமயத்தில் ஏற்படும் எதிர்பாராத திருப்பம்தான் படத்தின் கிளைமாக்ஸ்
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அரவிந்தசாமி கிடைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ரொமான்ஸ் மற்றும் அப்பாவித்தனமான இளைஞர் கேரக்டருக்கு கச்சிதமாக அவருடைய முகம் பொருந்துகிறது. நடிப்பிலும் நல்ல ஸ்கோரை பெறுகிறார். ரொமான்ஸ், கோபம், அம்மா பாசம், என பல பரிணாமங்களில் அவருடைய நடிப்பு மிளிர்கிறது
பிக்பாஸ் ரைசாவா இவர்? என்று கேட்கும் அளவுக்கு உள்ளது ரைசாவின் முகம். இவருடைய கேரக்டரில் மட்டுமின்றி நடிப்பிலும் குழப்பம் ஏற்படுகிறது. இந்த கேரக்டரில் ஓவியா நடித்திருந்தால் படம் சூப்பரோ சூப்பர் ஹிட்.
ரைசாவின் தந்தை கேரக்டரில் நடித்திருக்கும் ஆனந்த்பாபுவின் நடிப்பில் மெச்சூரிட்டி தெரிகிறது. இந்த வயதிலும் மனிதர் டான்ஸ் பின்னி எடுக்கின்றார். ரேகா, முனிஷ்காந்த் ஆகியோர் நடிப்பும் ஓகே
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் மொத்தம் 13 பாடல்கள். ஒன்றுகூட சலிப்பை தரவில்லை. அதுமட்டுமின்றி படத்தின் கதைக்கு அத்தனை பாடல்களும் பொருந்தியிருப்பது இன்னொரு ஆச்சரியம். மேலும் இந்த படத்தின் முதுகெலும்பே பின்னணி இசை என்றும் கூறலாம்.
லிவிங் டுகெதர் ரிலேசன்ஷிப், கல்யாணத்தால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றை சரியான காட்சிகளின் மூலம் அழுத்தமான கருத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் இளன். திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று நம் முன்னோர் கூறியது இன்றைய காலத்திற்கு ஏற்றதல்ல என்பதை அழுத்தமான காட்சிகள் மூலம் உடைத்தெறிகிறார். நம்முடைய கனவுக்காக வாழ்வது சுயநலம் அல்ல என்றும் பெற்றோருக்காக திருமணம் செய்வதால் இழப்புகள் ஏற்படும் என்பதுதான் இயக்குனர் சொல்ல வந்த கருத்து. அதை தெளிவாக சொல்லி முடித்திருக்கின்றார் இயக்குனர் இளன்,.
மொத்தத்தில் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற கச்சிதமான காதல் படம். படம் பிக்கப் ஆனால் 'விஸ்வரூபம் 2' படத்தை பின்னுக்கு தள்ளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
ரேட்டிங்: 3.5/5