1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 10 மே 2018 (16:03 IST)

மே 14ம் தேதி வரைவு திட்டம் தாக்கல் - மத்திய அரசு அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் இனிமேல் அவகாசம் கேட்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று தெரிவித்துள்ளார்
 
காவிரி நீர் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு  4 எம்.டி.சி நீரை தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மழை பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு சமீபத்டில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. 
 
கடந்த 8ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12 -ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்த விவகாரம் பற்றி இப்போது விவாதிக்க முடியாது என மத்திய அரசு தரப்பில் வாதிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கை வருகிற 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மேலும், அன்று மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
தனது தரப்பு வாதத்தை முன்வைத்த தமிழக அரசு “தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது.  தீர்ப்பை நிறைவேற்ற தவறியவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்” என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
எனவே, மே 14ம் தேதி மத்திய அரசு சார்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படுமா? இல்லை மீண்டும் அவகாசம் கேட்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வருகிற 14ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும். இனிமேல் அவகாசம் கேட்க மாட்டோம் என தெரிவித்தார்.