1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பயண‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 மே 2024 (09:13 IST)

சுற்றுலா போகப்போறீங்களா? இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க! – மகிழ்ச்சியான சுற்றுலாவுக்கு சில டிப்ஸ்!

Travel
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கோடைக்காலும் தொடங்கிவிட்ட நிலையில் மக்கள் சுற்றுலா பயணங்களில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் சுற்றுலாவுக்காக நீண்ட காலம் திட்டமிடுகின்றனர். சிலர் திடீரென சுற்றுலா திட்டமிடுவர்.



அவ்வாறாக சுற்றுலா கிளம்பும் முன்னர் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்பமாகவோ அல்லது நண்பர்கள் குழுவாகவோ செல்பவர்கள் முதலில் தாங்கள் பயணப்பட இருக்கும் சுற்றுலா பகுதியில் தங்குமிடம், வாகன வசதிகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் பல இடங்களில் தங்குமிடம் முன்னதாகவே புக் செய்யப்பட்டிருக்கும். அதனால் தங்க விடுதிகள் கிடைக்காமல் போகலாம் அல்லது மோசமான விடுதியில் கூடுதல் தொகை கொடுத்து தங்க வேண்டி வரலாம்.

அதுபோல சுற்றுலா செல்லும் ஊரிலிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுற்றி பார்க்க செல்வதென்றால் அப்பகுதிகளுக்கு பொதுப்போக்குவரத்து எந்தளவில் உள்ளது, கார் உள்ளிட்ட டிராவல்ஸ் வாகங்னகளுக்கு எந்த அடிப்படையில் பணம் வசூலிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். சொந்த ஊரிலிருந்து சுற்றுலா ஊருக்கு செல்ல பேருந்து அல்லது ரயிலில் முன்பதிவு செய்து விடுவது கடைசி கட்ட பதட்டங்களை குறைக்கும்.


சுற்றுலா செல்லும் பகுதிகளில் அருவிகள் உள்ளிட்டவற்றை காணும் திட்டமிருந்தால் அதுகுறித்து முதலிலேயே விசாரித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் சில அருவிகளில் தண்ணீர் இல்லாமல் இருக்கலாம் அல்லது அனுமதி நிறுத்தப்பட்டிருக்கலாம். குழுவாக செல்பவர்கள் சுற்றுலாவின் போது ஏற்படும் பதட்டங்களை தவிர்க்க தனியாக விடுதி புக் செய்து கொள்வது, வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. உள்ளூர் டிராவல் ஏஜென்சிகளிடம், ஓட்டுனர்களிடம் அந்த ஊரின் சுற்றுலா பகுதிகள் குறித்து கேட்டு திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

Travel guidelines


தனியாக சுற்றுலா பயணம் செய்பவர்கள் அல்லது தம்பதிகளாக செல்பவர்கள் சுற்றுலா அழைத்து செல்லும் டிராவல் ஏஜென்சிகளின் டூர் பேக்கேஜுகளை தேர்வு செய்வது நல்லது. அவர்கள் தங்குமிடம், வாகனம், உணவு என அனைத்தையும் ஏற்பாடு செய்து தருவதால் ஏற்பாடுகள் குறித்த எந்த கவலையுமின்றி பயணம் செய்யலாம். அதேசமயம் டூர் பேக்கேஜுக்கான தொகை ஏற்புடையதுதானா என்பதையும் சோதித்துக் கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் தாண்டி சுற்றுலா பயணிகள் தங்கள் உடல்நலம் குறுத்து தனி கவனம் செலுத்த வேண்டும். சுவாசக்கோளாறு, இதயக்கோளாறு இருந்தால் ட்ரெக்கிங் செல்வது போன்ற சாகச பயணங்களை தவிர்க்க வேண்டும். தேவையான மருந்து, மாத்திரைகளை கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்படலாம். அவர்கள் சுற்றுலா பகுதிகளில் கண்களை கவரும் அனைத்தையும் வாங்கி சாப்பிடாமல் உணவு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.

Edit by Prasanth.K