வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: வியாழன், 19 மே 2016 (17:32 IST)

தேர்தலில் மண்ணை கவ்விய முக்கிய அரசியல் தலைகள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.


 

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அரவங்குறிச்சி, தஞ்சாவூர் தவிர்த்து மொத்தம் 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதல் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தாலும், போகப் போக அதிமுக ஏறுமுகம் காட்டியது. தற்போது அதிமுக 132 இடங்களிலும், திமுக 99 இடங்களிலும் முன்னனியில் உள்ளது.
 
இந்த தேர்தலில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
 
முதலமைச்சர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்ட ஐந்து பேரில், ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். 
 
உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பென்னாகரம்  தொகுதியில் போட்டியிட்ட பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை நிறுவனர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
 
அதேபோல், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர். 
 
அதிமுக சார்பில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன்,  பாஜக சார்பில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். 
 
இந்த தேர்தலில்தான், அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.