திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா : ஸ்டாலின் கிண்டல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, திமுகவை காப்பி அடித்து தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று வெளியிட்டார் ஜெயலலிதா. அதுபற்றி முக.ஸ்டாலின் கூறியதாவது:
திமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்து, அதில் அவர்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா. ஏனெனில் ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவர்களுக்கு பிடிக்கும்.
ஜெயலலிதா கேட்டிருந்தால் நாங்களே அவருக்கு எங்கள் தேர்தல் அறிக்கையை கொடுத்திருப்போம். இதற்கு ஏன் இத்தனை நாட்கள் காத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கு ஒரு தலைமைச் செயலாளர் தேவையா?. இவ்வளவு அதிகாரிகளை உட்கார வைத்து ஆலோசிக்க வேண்டுமா?
ஏற்கனவே திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களுக்கு ஜெயலலிதா உரிமை கொண்டாடினார். இப்போது எங்கள் தேர்தல் அறிக்கைக்கு உரிமை கொண்டாடுகிறார்.
இதுவரை ஆட்சி செய்த 5 ஆண்டு காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க துப்பில்லை. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கப் போகிறாராம்.
மின்கட்டணத்தை மூன்று முறை உயர்த்தினார். அதனால் ரூ.2000 ரூபாய் மின் கட்டணம் வரை அதிகமாக செலுத்தும் நிலைக்கு மக்கள் ஆளானார்கள். மின்கட்டண ஸ்லாப்பை மாற்றி மக்களை சித்ரவதை செய்தார். திடீரென செக்யூரிட்டி டெபாசிட்டை ஏற்றினார். இப்போது இலவச மின்சாரம் என்று மக்களை ஏமாற்றுகிறார்.
மகளிருக்கு ஸ்கூட்டி வாங்க மான்யம் கொடுக்கப் போகிறாராம். பெண்கள் உங்களிடம் கேட்பது மதுவிலக்கு. அதுபற்றி ஏன் அறிவிக்கவில்லை.