'மோகமுள் ' இல்லா விட்டால் நான் இயக்குனராகியிருக்கமாட்டேன் - ஞான ராஜசேகரன்!
மோகமுள்' திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன .அந்த வகையில் 'மோகமுள்' படத்திற்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அப் படத்திற்காக எழுதிய திரைக்கதையை நூலாக அப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ் உருவாக்கியிருக்கிறார்.இந்த நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.'மோகமுள்' திரைக்கதை நூலின் வெளியீடு ,44வது புத்தகக்காட்சியில் காவ்யா பதிப்பக அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் இயக்குநரும் நூலாசிரியருமான ஞான ராஜசேகரன் பேசும்போது,
"நான் இயக்கிய முதல் படம் 'மோக முள்'. அந்தப் படத்தின் மூலம்தான் நான் இயக்குநர் ஆனேன்.நான் வேறொரு துறையில் இருந்தேன். 'மோகமுள் ' இல்லா விட்டால் நான் இயக்குநராக ஆகியிருப்பேனா என்று சந்தேகம்தான்.
என்னை இயக்குநராக்கி
இன்றுவரை எனக்கு அடையாளமாக இருப்பதும் 'மோகமுள்' தான் என்று சொல்வேன் .மூன்றாண்டு ஆண்டுகாலம் சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்தோம்.இந்த படத்திற்குக் கிடைத்த விருதுகள், பாராட்டுகள் போன்ற அங்கீகாரம் தான் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.இந்தப் படத்தில் அறிமுகமான அபிஷேக் பெரிதாக வளர்ந்திருக்கிறார் . குறிப்பாகத் தொலைக்காட்சியில் சிறந்து விளங்குகிறார்.
படத்தில் நான் அறிமுகப்படுத்திய அர்ச்சனா ஜோக் லேக்கரும் வளர்ந்து புகழ் பெற்றார்.
அறிமுகப்படுத்தியவன் என்ற வகையில் இது எனக்கு மகிழ்ச்சி.'மோகமுள்', 'பாரதி', 'பெரியார்' என என் படங்களுக்குத் தன் ஒளிப்பதிவின் மூலம் பெரிய பலமாக இருந்த தங்கர்பச்சான் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி.படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர் வாஸந்தி கூறினார் "இது தி. ஜானகிராமனுக்கான சிறந்த அஞ்சலி " என்று .அதை இப்போது உணர்கிறேன்.
இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்களை விட உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஏராளமான பேர் பார்த்திருக்கிறார்கள்.
படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. தி ஜானகிராமன் அவர்களின் நூற்றாண்டில் படத்துக்கான வெள்ளி விழா ஆண்டு வருவது மகிழ்ச்சி. அதனால் இந்நிகழ்வு கவனம் பெறுகிறது.எனக்கு ஒரு 50 பேராவது தொலைபேசி விசாரித்து இருப்பார்கள் "படத்திற்கான வெள்ளிவிழா கொண்டாட வில்லையா?எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?" என்று. அந்த அளவுக்கு 'மோகமுள்' இன்றும் ஒரு பேசுபொருளாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது"என்றார்.