வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (07:29 IST)

சினிமாவில் குப்பை படங்கள் அதிகரிப்பது ஏன்? ஆர்.கே.செல்வமணி

கோலிவுட்டில் வாரம் நான்கு படங்களுக்கு குறையாமல் வெளிவந்தாலும் வருடத்திற்கு பத்து அல்லது பதினைந்து படங்கள்தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் தொழில் தெரியாமல் ஆர்வக்கோளாறில் படம் எடுப்பதால்தான் என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.



 


இந்த நிலையில்  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது சினிமாவில் குப்பை படங்கள் அதிகம் வெளிவர தொழில் தெரியாதவர்கள் படம் எடுப்பதுதான் காரணம் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவையும் தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழாவையும் விரைவில் கொண்டாட இருக்கிறோம். இந்த விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். முன்பெல்லாம் வெற்றி படங்கள் தோல்வி படங்கள் என்று இருந்த சினிமாவில் இப்போது குப்பை படங்கள் அதிகம் வருவதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளது.

திரைப்பட துறையில் அனுபவம் இல்லாதவர்களும் தொழில் தெரியாதவர்களும் படங்கள் எடுப்பதால்தான் இதுபோன்ற ஒழுங்கீனங்கள் ஏற்பட்டு குப்பை படங்கள் வருகின்றன. சம்பளம் வேண்டாம் என்று சொல்லும் திரைப்பட தொழிலாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்களை வைத்து படங்கள் எடுப்பதாலேயே இந்த தவறுகள் நடக்கின்றன. இனிமேல் தொழில் தெரியாதவர்களை வைத்து படங்கள் தயாரிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்' இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்