மேலும் 20 நிமிடத்தைச் சேர்த்த புஷ்பா 2 படக்குழு…!
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு புஷ்பா 2 வசூல் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகவுள்ள நிலையிலும் இன்னும் கணிசமான அளவு வசூல் செய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் இதுவரை 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில் தற்போது படத்தில் மேலும் 20 நிமிடக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் நீளம் 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் அளவுக்கு வெட்டப்பட்டிருந்தது. இப்போது கூடுதலாக காட்சிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இதே வடிவம்தான் ஓடிடியில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.