ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth.K
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (11:55 IST)

யார் இந்த வீரப்பன்? போராளியா? குற்றவாளியா? – The hunt for Veerappan விமர்சனம்!

Veerappan reward
2000களில் இந்தியாவை மிரள செய்த ஒரு பெயர் வீரப்பன். தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம் கிராமத்தில் பிறந்த வீரப்பன் யானை தந்தம் கடத்தல், சந்தன கடத்தல் என பல குற்ற செயல்கள் புரிந்ததோடு, பல காவல்துறை, வனத்துறை அதிகாரிகளையும் கொன்றதற்காக தேடப்பட்டு கொல்லப்பட்ட ஒரு நபர்.



இன்று வரையில் வீரப்பனின் கதை சர்ச்சைக்குரிய ஒரு கதையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. யார் இந்த வீரப்பன்? போராளியா? குற்றவாளியா? என்ற கேள்விகளுடன் பயணிக்கிறது சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள The Hunt for Veerappan ஆவண தொடர்.

வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமியிடம் இருந்து தொடங்கும் இந்த ஆவணத்தொடரின் முதல் பாகம் முத்துலெட்சுமியுடனான வீரப்பனின் காதல், தந்தம், சந்தன மரம் கடத்தல் என தொடங்கி பயணிக்கிறது. வீரப்பனால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட கர்நாடக வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாசனின் கொலையுடன் முதல் எபிசோட் நிறைவடைகிறது.

இந்த ஸ்ரீனிவாசனின் கொலைதான் தொடர்ந்து வீரப்பனை மிக முக்கிய குற்றவாளியாக மாற்றியது. வீரப்பனின் கோபிநத்தம் கிராமத்தையும் பாடாய் படுத்தியது. அதை தொடர்ந்த அடுத்தடுத்த எபிசோடுகளில் STF அதிகாரி ஷகீல் அஹ்மத், ஹரிகிருஷ்ணா போன்றவர்களை கொன்றதும் அதை தொடர்ந்து அவரது தலைக்கு கர்நாடக அரசு ரூ.20 லட்சம் ரிவார்ட் அறிவித்தது என்று ஒரு திரைப்படத்தை மிஞ்சும் சுவாரஸ்யத்துடன் பயணிக்கிறது வீரப்பன் குறித்த இந்த ஆவணத் தொடர்.

The Hunt for Veerappan


வீரப்பன் யார் என்பது குறித்து அறியாத இன்றைய காலக்கட்டத்தினர் வீரப்பனின் ஆதி முதல் அந்தம் வரை நடந்த குற்றங்கள், வீரப்பன் வேட்டையாடப்பட்டது எப்படி என்பது குறித்த பல விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த டாக்குமெண்டரி முழுமையானதாக இல்லை என்று வீரப்பனை ஆதரிப்போர் பலர் குற்றம் கூறுவதையும் காண முடிகிறது.

வீரப்பன் குற்ற செயல்களில் ஈடுபட்டது குறித்தும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் விரிவாக சொல்லப்பட்டுள்ள அளவிற்கு வீரப்பன் இந்த சூழலுக்கு தள்ளப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பேசப்படவில்லை என்று சிலர் குறைபட்டுக் கொள்கின்றனர்.

அதுபோல வீரப்பன் கர்நாடக, தமிழக அதிகாரிகளை கொன்றது குறித்து விவரிக்கப்பட்டுள்ள அளவு Special Task Force அதிகாரிகள் வீரப்பனை பிடிப்பதற்காக கோபிநத்தம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்கள் மீது நடத்திய கொடுமைகள், தாக்குதல்கள், சித்ரவதைகள் குறித்தும் தெளிவாக காட்டப்படவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனாலும் இதுகுறித்து ஒரு சில காட்சிகள், ஆவணங்கள் தொடரில் இடம் பெற்றுள்ளன.

காலம் காலமாக வீரப்பன் எவ்வளவோ குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் உலகம் முழுவதும் வீரப்பனின் பெயரை தெரிய செய்த சம்பவம் நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம். அதற்கு முன்னர் வரை வீரப்பன் யானை தந்தம், சந்தனம் கடத்திய குற்றவாளியாகவும், பல அதிகாரிகளை கொன்ற குற்றவாளியாகவுமே கருதப்பட்டார். ஆனால் ராஜ்குமாரை கடத்தியபோது வீரப்பன் முன் வைத்த தமிழ் ஈழ ஆதரவு கோரிக்கைகள் சமூகத்தில் அவருக்கு ஒரு போராளி பிம்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

Veerappan


1997, 1998 வரை பல்வேறு கொலை சம்பவங்கள் மூலம் அறியப்பட்ட வீரப்பன் அதன் பின்னர் தலைமறைவானார். சில ஆண்டுகள் அவரிடம் எந்த நகர்வும் தென்படவில்லை. அந்த சமயங்களில் அவரது எண்ணங்கள், கருத்துக்கள் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது. அதற்கு பின்னர் அவர் தமிழ் ஈழ ஆதரவு மனநிலையை அடைந்தது மட்டுமல்லாமல் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனையும் காண ஆவல் கொண்டிருந்தது ஆவண தொடர் மூலம் தெரிய வருகிறது. அதேசமயம் தனது குற்றவாளி பிம்பத்தை மாற்றிக் கொள்ள, தன்னை ஒரு போராளியாய் காட்டிக் கொள்ளவே வீரப்பன் இந்த கடத்தலை அரங்கேற்றியதாக அதிகாரிகள் தரப்பில் கருத்து உள்ளது. ராஜ்குமாரை விடுதலை செய்ய ரூ.1000 கோடி முதல் ரூ100 கோடி வரை வீரப்பன் பேரம் பேசியதாக ஆவணத் தொடரில் காட்டப்படுகிறது. ஆனால் அவர் கடைசியில் ராஜ்குமாரை விடுதலை செய்ய பணம் பெற்றாரா என்பது குறித்த தகவல்கள் அதில் இடம்பெறவில்லை.

2000ம் ஆண்டில் ஜூலை 30 ல் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் சுமார் 108 நாட்கள் வீரப்பனுடன் காட்டில் வாழ்ந்துள்ளார். எனினும் அவரை துன்புறுத்தாமல் நல்லபடியாக கவனித்து சிரித்த முகத்துடன் வீரப்பன் அனுப்பி வைத்துள்ளார். பிரியும்போது இருவரும் ஆரக்கட்டி தழுவிக் கொண்டுள்ளனர்.

Veerappan Rajkumar


இந்த கடத்தல் சம்பவத்திற்கு பிறகு வீரப்பன் வேட்டை சூடுபிடிக்கிறது. ஆனால் வீரப்பனுக்கு அங்கிருந்து தப்பி சென்று விடுதலை புலிகளுடனும், தலைவர் பிரபாகரனுடனும் இருப்பதற்காக இலங்கை செல்ல திட்டமிருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி ஐபிஎஸ் அதிகாரி விஜயக்குமார் தலைமையிலான குழு வீரப்பன் மற்றும் கூட்டாளிகளை ட்ராப் செய்து சுட்டுக் கொல்கின்றனர். ஆனால் இந்த கொலையிலும் ஏகப்பட்ட சந்தேகங்களும், சதி கோட்பாடு கதைகளும் வலம் வந்தபடியே உள்ளன.

எப்படியாகிலும் இந்தியாவையே அச்சுறுத்திய வீரப்பன் 2004 அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி மாவட்டம் பாப்பரப்பட்டியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகிறார். வீரப்பன் மீதான இந்த வேட்டைக்காக அப்போதைய காலத்திலேயே 220 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், 5000 காவல் துறையினர், வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடந்த மிக பொருட்செலவு கொண்ட மிகப்பெரும் மனித வேட்டை இதுவாகும். பல நிறை குறைகளை தாண்டி வீரப்பன் குறித்த கதையை மீண்டும் வரலாற்றிலிருந்து எடுத்து விவாதத்தை நோக்கி தள்ளியுள்ளது இந்த ஆவணத் தொடர்.

Veerappan


வீரப்பன் குறித்த அனைத்து தகவல்களையும் திரட்டி அதுசார்ந்த நபர்களை தேடி சென்று மீண்டும் அச்சம்பவங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி வெற்றி பெற்றுள்ளார் ஆவணப்படத்தை இயக்கிய செல்வமணி செல்வராஜ். வீரப்பன் குறித்து அவர் காலத்திலிருந்தே ஆக்டிவாக இயங்கி அவரை நேரிலேயே பார்த்து போட்டோ எடுத்து பேட்டி எடுத்து வந்த பத்திரிக்கையாளர் பெ.சிவசுப்ரமணியன் அவர்களின் பேட்டி ஆவணத்தொடரில் சுவாரஸ்யமானதொரு பகுதியாகவும், வீரப்பன் குறித்த அவரது கடும் உழைப்புக்கு நல்ல அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது.

குறிப்பு: இந்த கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே. இதில் வெப்துனியா தளத்திற்கு எந்த வித தொடர்பும், பொறுப்பும் கிடையாது.

Edit by Prasanth.K