சென்னையில ஒரு பிலிம் சிட்டி வேணும்… தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை!
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் பட ப்ரமோஷனில் கலந்துகொண்டு வரும் விஷால் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் “ஒரு காலத்தில் அனைத்து மொழி சினிமாக்களும் சென்னையில்தான் எடுக்கப்பட்டன. ஆனால் இப்போது சென்னையில் ஒரு பிலிம்சிட்டி இல்லை. வேறு மாநிலத்துக்குதான் செல்லவேண்டியுள்ளது. அதனால் அனைத்து வசதிகளுடன் கூடிய பிலிம்சிட்டியை சென்னையில் உருவாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.