மெர்சல் படத்திற்கான தடை நீங்கியது - தீபாவளிக்கு ரிலீஸ்
நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகவிருந்து படம் மெர்சல். தலைப்பு, கேளிக்கை வரி, விலங்கு நல வாரியம் என தொடர்ச்சியாக பிரச்சனையை இப்படம் சந்தித்தது. எனவே, இப்படம் படக்குழு கூறியது போல், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்பதில் சந்தேகம் நீடித்தது.
அந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகிய இருவரும் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்து விலங்கு நல வாரியம் இன்று காலை அவசரமாக ஆலோசனை செய்தது.
அதோடு, படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சி தொடர்பான ஆவணங்களை படக்குழு சமர்பித்ததாக தெரிகிறது. இதையடுத்து, தடையில்லா சான்றிதழை விலங்கு நல வாரியம் அளித்துவிட்டதாக தெரிகிறது. மேலும், சில காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
எனவே, தீபாவளியன்று மெர்சல் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.