புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (22:06 IST)

விஜயை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்? - எதிர்ப்பை வேறு மாதிரி காட்டும் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தொடர்பாக வெளியான போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் விஜய் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை தங்கள் முகப்பு படமாக மாற்றி வருகின்றனர்.

 
விஜய்- முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. 
 
இந்த ஃபர்ஸ்ட் லூக் புகைப்படத்திற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், பொது சுகாதாரத்துறை சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் அந்த புகைப்படத்தை நீக்குமாறு இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய், படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இதையடுத்து, சன்பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது. 
 
இதற்கிடையே, அடையார் புற்று நோய் மருத்துவ மையம் சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை விளம்பரப்படுத்தியதற்காக ரூ. 10 கோடி தங்களது புற்று நோய் மையத்திற்கு இழப்பீடாக வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தது. 
 
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸை 2 வாரத்தில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
 
இந்த விவகாரங்கள் விஜய் ரசிகர்களுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் ஏராளமான நடிகர்கள் புகைப்பிடிக்கும்  காட்சிகளில் நடித்திருக்கும் போது விஜயை மட்டும் ஏன் குறித்து பிரச்சனை செய்கின்றனர். இதற்கு பின் அரசியல் இருக்கிறது என அவர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். அதோடு, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நீக்க வேண்டும் என சுகாதாரத்துறை கூறிய விஜய் புகைப்பிடிப்பது போல் வெளியிடப்பட்ட படத்தை தங்களின் சமூக வலைத்தள முகப்பு படமாக மாற்றி வருகின்றனர்.