செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (14:54 IST)

குறி வெச்சா இரை விழனும்.. விழுந்ததா? - வேட்டையன் திரை விமர்சனம்!

Vettaiyan

முந்தைய ரஜினி படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகள், மாஸ் கமர்ஷியல் வரவேற்புகள் ஏதுமின்றி சைலண்டாக வெளியாகியிருக்கிறது வேட்டையன். படத்தின் டீசரில் என்கவுண்ட்டருக்கு ஆதரவாக ரஜினி பேசும் வசனங்களால் எதிர்ப்பு எழுந்தாலும் படம் என்னவோ என்கவுண்ட்டரை எதிர்த்துதான் இருக்கிறது.

 

 

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அதியன் (ரஜினி) கன்னியாக்குமரி எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு சரண்யா (துஷாரா) என்ற ஆசிரியரிடம் இருந்து கடிதம் வருகிறது. அரசு பள்ளியில் கஞ்சா பதுக்கல் நடைபெறுவது குறித்த அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கும் அதியன், அந்த குற்றத்தை செய்த ரவுடியை என்கவுண்ட்டரில் கொல்கிறார்.

 

கன்னியாக்குமரியில் இருந்து பணி மாறுதல் பெற்று சென்னை செல்லும் சரண்யா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். விசாரணையில் அதற்கு காரணம் சேரியை சேர்ந்த ஒரு நபர் என தெரியவரும் நிலையில், தலைமறைவான அந்த நபரை அதியன் தேடி சென்று என்கவுண்ட்டரில் கொல்கிறார். ஆனால் அவர் குற்றவாளி இல்லை என சத்யதேவ் என்னும் ஓய்வுபெற்ற நீதிபதி (அமிதாப் பச்சன்) மூலம் தெரிய வருகிறது.

 

ஒரு தவறான என்கவுண்ட்டரை செய்துவிட்ட குற்றவுணர்ச்சி அதியனை துரத்த உண்மை குற்றவாளியை தேடி செல்கிறார் அதியன். அதன்பின்னால் மிகப்பெரும் கல்வி மோசடி, பெரிய லாபி செயல்படுவது தெரிய வருகிறது. அப்படியான கல்வி மோசடிகளை, மோசடி முதலையை அதியன் எப்படி சட்டத்தின் பிடியில் கொண்டு வருகிறார் என்பது மீதிக்கதை.

 

ஜெய்பீம் போன்ற லீனியரான கதை கொடுத்த த.செ.ஞானவேல், வேட்டையனில் நான் லீனியரான சஸ்பென்சிவ் த்ரில்லர் வகையில் பயணிக்கிறார். சரண்யா கொலையை சுற்றியே கதை சுழல்கிறது. என்கவுண்ட்டர் சரியென நம்பும் அதியன், என்கவுண்ட்டரால் சட்டத்தை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து சத்யதேவ் போல சட்டத்தை நம்ப தொடங்குவதுதான் கதையின் மையம்.

 

 

ரஜினியின் கமர்ஷியல் வேல்யூக்காக ஆங்காங்கே சில ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதில் சில கதைக்கு தேவையில்லாமல் இருப்பதால் அயற்சி எழுவதை தவிர்க்க முடியவில்லை. கல்வி மோசடிகள் குறித்த காட்சிகள், கொலைக்கான விசாரணை காட்சிகள் வேகமாக நகர்ந்து செல்வது விறுவிறுப்பை அளித்தாலும், அதற்கிடையேயான காட்சிகள் தொய்வாக இருக்கிறது.

 

பேட்டரியாக வரும் பகத் பாசில் நடிப்பால் அனைவரையும் வசீகரிக்கிறார். ரூபா (ரித்திகா சிங்) பாத்திரம் கதைக்கு தேவையான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மஞ்சு வாரியன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கு குறைந்த அளவு காட்சிகளே இருந்தாலும் தோன்றும் காட்சிகளில் அற்புதமாக ஸ்கோர் செய்கிறார்கள். ரானா டகுபதி வழக்கமாக படங்களில் வரும் கார்ப்பரேட் வில்லன்கள் போல கண்ணாடி ரூமில் கோர்ட், ஷூட்டோடு தோன்றுவதை தவிர தனித்துவமான கதாப்பாத்திரமாக அவர் அமையவில்லை.

 

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு சிறப்பு. பிலோமின் ராஜின் ஆக்‌ஷன் எடிட் சிறப்பாக இருந்தாலும், நிலையான காட்சிகளில் முதலும் முடிவும் இன்றி காணப்படுகிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஹிட். பின்னணி இசையில் மெனக்கெடல் இல்லை என ஆடியன்ஸ் உணருகின்றனர். 

 

துப்பாக்கியையே எடுக்கக் கூடாது என முடிவு செய்த அதியன் க்ளைமேக்ஸ் காட்சிகளில் வெளிநாட்டு ரவுகளை ஹெட்ஷாட்டில் கொன்று அதகளம் செய்வது படத்தின் முடிவுக்கு பொருந்தாமல் தோன்ற செய்கிறது.

 

மொத்தத்தில் ஒரு சமூகத்திற்கு அவசியமான செய்தியை படம் சொன்னாலும், ஜெய்பீம் போல முழுவதும் த.செ.ஞானவேலின் படமாக அல்லாமல், முழுக்க ரஜினியின் கமர்ஷியல் படமாகவும் இல்லாமல் நடுவில் தொக்கி நிற்பதால் பார்வையாளர்கள் படத்தை உள்வாங்கி கொள்வதில் சிக்கல்கள் எழுகிறது. 

 

Edit by Prasanth.K