1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (11:13 IST)

என் அரசியல் கருத்துக்கும் சூரரைப் போற்று சான்றிதழுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! சூர்யா பதில்!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனது குறித்து சூர்யா பதிலளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூர்யா கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் பாத்திரத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சில காட்சிகளுக்காக விமானப்படையிடம் இருந்து ஒப்புதல் சான்றிதழ் ஒன்று வந்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியுமாம். அதனால் இப்போது அந்த என் ஓ சிக்காக படக்குழு அவசர அவசரமாக பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்த சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஆனதால் படத்தில் ரிலிஸ் 12 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இப்போது தீபாவளி வெளியீடாக வெளியாகிறது.

இந்நிலையில் இந்த சான்றிதழ் வாங்குவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு சூர்யாவின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக கருத்துகள்தான் காரணமா எனப் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது சூர்யா அதை மறுத்துள்ளார். மேலும் ‘இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. எங்களுக்கு மட்டும்தான் அனுமதி கிடைத்தது. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. எல்லா நடைமுறைகளும் முடிந்து சான்றிதழ் வாங்குவதற்கு தாமதமாகிவிட்டது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளும் படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை’ எனக் கூறியுள்ளார்.