வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (10:01 IST)

கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தால் உயர்வு வந்துவிடும்… வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹர்ப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படம் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வணங்கான் படத்தைப் பார்த்துள்ள நடிகர் அருண் விஜய் “மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்...” என மகிழ்ச்சியோடு பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில் “கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தால் நமக்கான மகிழ்ச்சியான தருணங்களும்... உயர்வும் எப்படியும் வந்துவிடும். திறமையான இயக்குநர் கையால் செய்யப்பட்ட ஆபரணமான "வணங்கான்" உங்கள் வாழ்க்கையில் ஒளிரட்டும். அருண்விஜய் என்ற நல்ல நடிகன் மீது ரசிகர்களின் அன்பு அதிகமாகட்டும். குடும்பத்தினரும் படம் பார்த்து நெகிழ்ந்துள்ளனர். அவர்களின் ஆசியும் நிறையட்டும். இயக்குநர் அண்ணன் பாலாவுக்கு நன்றிகளும்... அன்பும்... ரசிகர்களுக்கும் இப்படம் மிகப் பிடித்தமான படமாக அமைய வேண்டிக்கொள்கிறேன். நிச்சயம் அமையும். விரைவில் உங்களை சந்திப்பான் "வணங்கான்".” எனக் கூறியுள்ளார்.