செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (13:16 IST)

பிரபாஸ் பற்றி ‘சுவையான’ தகவல் சொன்ன ராஜமெளலி

பாகுபலி ஷூட்டிங் சமயத்தில் நடந்த ‘சுவையான’ தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.



 

கோடிகளைக் குவித்த ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமெளலியுடன், பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரபாஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார் ராஜமெளலி.

கட்டுடலுக்காக தீவிர டயட்டில் இருந்த பிரபாஸ், மாதத்துக்கு ஒருமுறை மட்டும் டயட்டைத் தளர்த்தி பிடித்த உணவுகளைச் சாப்பிடுவார். அப்போது, பிரியாணியில் மட்டுமே 15 வகைகள் இடம்பெறுமாம். அத்துடன், சிக்கன், மட்டன், மீன் கிரேவி, வறுவல் என ஒரு முனியாண்டி விலாஸே அங்கு இருக்குமாம்.

அப்படித்தான் ஒருநாள் ஃபுட்பால் விளையாடிவிட்டு இரவு 2 மணிக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். எல்லாவகை உணவுகளையும் ருசிபார்த்த பிரபாஸ், ‘சட்னி இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார். உடனே வீட்டுக்கு ஓடிப்போய் தன் மனைவியை எழுப்பி சட்னி அரைத்து எடுத்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார் பிரபாஸின் மச்சான். தன் முன்னே அவ்வளவு உணவுகள் இருந்தும், சட்னிக்காக அர்த்த ராத்திரியில் அலம்பல் கொடுத்திருக்கிறார் பிரபாஸ்.