சலார் படத்தின் முதல் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி!
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது. 5 மொழிகளில் வெளியான இந்த டிரைலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
முதலில் இந்த திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்னர்தான் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜோதிடக் காரணங்களுக்காகதான் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சலார் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்ததாக சொல்லப்பட்டது. அதை இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் உறுதிப் படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இப்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் முதல் டிக்கெட்டை பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு வழங்கியுள்ளது படக்குழு. இந்த நிகழ்வில் பிரபாஸ், பிருத்விராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.