ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்... கவனம் ஈர்க்கும் வீடியோ
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் படத்துக்கான ப்ரோமோ வீடியோ சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் பாணியில் ஒரு ப்ரோமோவோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. படத்துக்கு மாவீரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பெயரில் ரஜினி படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.