வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:24 IST)

ஹீரோவின் நாயகன் சக்திமானா?! – மாஸ் காட்டும் ஹீரோ ட்ரெய்லர்!

சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ஹீரோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் இந்தியாவில் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழிலும் சூப்பர்ஹீரோ படங்கள் தயாரிக்க ஈடுபாடு அதிகமாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக சூப்பர்ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கே ‘ஹீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. சிறு வயதிலிருந்தே சக்திமான் நாடகத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படும் சக்தி என்னும் கதாப்பாத்திரமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் சூப்பர்ஹீரோவாக சக்தி எப்படி மாறுகிறான் என்பதே படத்தின் மூலக்கதை. பொதுவாக சூப்பர்ஹீரோ படங்களில் வருவதை போல அதிசய சக்தி படைத்த வில்லன் கதாப்பாத்திரத்தை உருவாக்காமல் சமூகத்தில் தற்போது நிலவி வரும் கார்ப்பரேட் மய சூழலை அடிப்படையாக கொண்டு வில்லன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்துள்ளார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், ட்ரெய்லரில் இடம்பெறும் பிண்ணனி இசையும் சூப்பர்ஹீரோ படத்துக்கு ஏற்றப்படி அமைந்துள்ளது. இந்த படம் எதிர்வரும் டிசம்பர் 20ல் ரிலீஸாக இருக்கிறது.

காமெடி ஹீரோவாய், குடும்பங்கள் விரும்பும் ஹீரோவாய் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன் சூப்பர்ஹீரோவாகவும் நிச்சயம் கவர்வார் என எதிர்பார்க்கலாம்.