ரஜினி, அஜித்தோடு மோதும் கதிர் - பொங்கலுக்கு சிகை வெளியீடு
பொங்கலுக்கு ரைனியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் வெளியாவதை அடுத்து நீண்ட காலமாக இழுபறியில் இருந்த கதிர் நடித்த சிகைப் படமும் வெளியாக இருக்கிறது.
கதிர் தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரமாக உருவாகி நம்பிக்கை அளித்து வருகிறார். அதிகளவிலான படங்கள் மற்றும் வசூல் சாதனை செய்யாவிட்டாலும் அவரது படங்கள் எதுவும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததில்லை. மதயானைக்கூட்டம், கிருமி, விக்ரம் வேதா ஆகியப் படங்களில் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருப்பார். அதையடுத்தது அவர் நடித்து கடந்த ஆண்டு செப்டமபர் மாதம் வெளியான பரியேறும் பெருமாள் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த வரவேற்பால் கதிர் நடித்து இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் சிகைப் படத்தை அதன் தயாரிப்புத் தரப்பு தூசு தட்டி எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சிகை படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதையடுத்து பட வெளியீடு குறித்து எந்தவொரு தகவலும் வெளியாக வில்லை.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எல்லாத் திரையரங்கங்களும் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் ஜீ5 (zee5) தளத்தில் வெளியாக உள்ளது. தமிழில் முதல்முறையாக நேரடியாக ஜீ 5 தளத்தில் வெளியாகும் படம் சிகைதான். இதுபோல பாலாஜி தரணிதரனின் ஒரு பக்கக் கதை படமும் ஜீ 5 தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.