ஆஸ்கர் பட்டியலில் ஷ்யாம் சிங்கா ராய்… மூன்று பிரிவுகளில் போட்டியிட வாய்ப்பு
நானி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் ஷ்யாம் சிங்கா ராய் சுமாரான வரவேற்பைப் பெற்றது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியான ஷ்யாம் சிங்கா ராய் பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி பெரும் கவனத்தைக் குவித்தது.
இந்திய சினிமா காலம்காலமாக பார்த்துப் பழகிய முன் ஜென்மத்து காதல் கதை என்றாலும் பிளாஷ் பேக்கில் வரும் காட்சிகளின் முற்போக்கு கருத்தியலாலும் நானி மற்றும் சாய்பல்லவியின் நடிப்பாலும் கவரப்பட்டு இப்போது அதிகளவில் ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரத்தில் நெட்பிளிக்ஸில் ஆங்கிலம் இல்லாத மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் உலகளவில் மூன்றாம் இடத்திலும், இந்திய அளவில் முதல் இடத்திலும் ஷ்யாம் சிங்கா ராய் இடம் பிடித்தது.
இந்நிலையில் இப்போது இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படங்களின் பட்டியலில் இந்த படம் உள்ளதாக சொல்லப்படுகிறது. வரலாற்று கால திரைப்படம், பின்னணி இசை மற்றும் பாரம்பரிய கலாச்சார நடனம் உள்ள சுயாதீன படம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.