தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா இயக்கத்தில் உருவான பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் ஒரு பதின் பருவ பெண்ணின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் சார்ந்த காட்சிகள் பலவற்றைக் காட்டியிருந்தனர். அதில் அந்த பெண் புகைப்பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால் கண்டனங்கள் எழுந்தன.
இந்த டீசரைப் பாராட்டிய விஜய் சேதுபதி, பா ரஞ்சித் ஆகியோருக்கு எதிராகவும் சமூகவலைதளங்களில் கண்டனப் பதிவுகள் வெளியாகின. இதையடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் தற்போது கருத்துகள் வலுத்துள்ளன.
இதுபற்றி சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் பேசியுள்ளார். அதில் “பேட் கேர்ள் படத்தை வெளியிடக் கூடாது என்பதற்குப் பலரும் பல காரணங்களை சொல்கிறார்கள். படத்தை எதிர்ப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் டிரைலரை மட்டும் பார்த்துவிட்டு படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சொல்வது நியாயமில்லை. இந்த படத்தை ஒரு பெண் இயக்கியுள்ளார். இப்போது அவர் மனம் உடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. 20 வருடத்துக்கு ஒரு இயக்குனர்தான் வருகிறார். எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த படம் வெளியாக உதவி செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.