வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (16:59 IST)

90ஸ் கிட்ஸின் “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” ரிட்டர்ன்! – படமாகிறது ஷோயப் அக்தர் வாழ்க்கை!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உலக புகழ்பெற்ற பந்து வீச்சாளருமான ஷோயப் அக்தரின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 90களில் கொடிக்கட்டி பறந்த வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 46 டெஸ்ட் ஆட்டங்களில் 178 விக்கெட்டுகளும், 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளும், 15 டி 20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தவர் ஷோயப் அக்தர்.

2002ம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் மணிக்கு 161 கிலோ மீட்டர் வேகத்தில் அக்தர் வீசிய பந்து இன்று வரை உலக சாதனையாக இருந்து வருகிறது. இவரது அதிவேக பந்து வீச்சிற்காகவே 90ஸ் கிட்ஸ் இவரை “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்று செல்லமாக அழைப்பார்கள்.

தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் தொடர்ந்து யூட்யூப் சேனல் மூலமாக கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார் ஷோயப் அக்தர்.

இந்நிலையில் ஷோயப் அக்தரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. அவரது செல்ல பெயரான “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்ற பெயரே படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை முகமது பராஸ் கெய்சர் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்து மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷோயப் அக்தர் “ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாவது இதுவே முதல்முறை” என தெரிவித்துள்ளார்.