1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:18 IST)

’எம்ஜிஆர் மகன்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ ’சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிய அடுத்த படம் ’எம்ஜிஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிவிப்பு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள். ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது
 
இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மற்றும் வினியோகஸ்தர் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு செய்திருக்கிறோம்
 
தமிழ்நாடு முழுவதும் விநியோகிஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்’