திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J. Durai
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (20:18 IST)

திரை விமர்சனம் - ரியோவின் ‘ஜோ’ எப்படி இருக்கு?

அருளானந்து தயாரிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கி ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்" ஜோ".


இத்திரைப்படத்தில் மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா,அன்பு உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழ்நாட்டு ஜோவும், கேரளத்து சுஜியும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். அவர்களுக்குள் நெருக்கமும் அதே சமயம் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகின்றது.

ஜோ, சுஜி காதலில் ஜோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் சுஜியின் வீட்டார் அவர்களின் காதலை எதிர்க்கிறார்கள். இதனால் மிக மன உளச்சலுக்கு ஆளாகிறார் ஜோ. தங்கள் மகனை மீட்க அவனை வேறொரு திருமண வாழ்க்கைக்கு  தள்ளிவிட முயற்சி செய்கிறார்கள்.

அது ஜோவுக்கு  அமையாமல் புயல் வீசும் களமாக மாறிப்போகிறது. ஏற்கனவே அடிபட்டவன் இப்போது மிதிபட அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பது தான் "ஜோ" திரைப்படத்தின் கதை. ஜோவாக ரியோ ராஜ். காதலும் மோதலுமாய் நகரும் நாட்களில்  பளபளப்பாக இருக்கிறார்.

சோகம் தொற்றிக் கொண்டபின் முகம் மறைய தாடி மீசையோடு வரும்போது பரிதாபத்தை அள்ளுகிறார். கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடிப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளார். சுஜியாக கேரளத்து அறிமுக நாயகி மாளவிகா மனோஜ்.  வசீகரமும்  பாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பும் அருமை. கதைநாயகனின் இரண்டாவது ஜோடியாக பவ்யா திரிகா.

நடை உடையில் பணக்காரத்தனம் காட்டுவது, தனக்குச் சொந்தமான கல்லூரியில் கறாரான சட்டதிட்டங்கள் வகுக்கும்போது சர்வாதிகார மனோபாவத்தை வெளிப்படுத்துவது, கணவனின் மனதை புரிந்துகொள்ளாமல் அவனது மனம் நோக நடப்பது, கணவன் நல்லவன் என புரியும்போது கனிவுப் பார்வையால் கவர்வது என தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

கல்லூரியில் கோச்சாக இருப்பதால் ஆர்யா என்ற தன் பெயரை கோச்சார்யாவாக மாற்றிக் கொண்டு சுற்றித் திரிகிற அந்த இளைஞன் சீரியஸாக பயணிக்கும் கதையில் ஆங்காங்கே சிரிப்பு காணப்படுகிறது. நாயகனுக்கு அம்மாவாக வருகிற பிரவீணா, அப்பாவாக வருகிற இளங்கோ குமணன் என படத்தில் கொடுத்த  கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர்.

சித்துகுமார் இசையில்  அந்தோணி தாசன் பாடியிருக்கும்  பாடல்கள் உற்சாகம் தருகிறது. ராகுல் விக்னேஷ் ஒளிப்பதிவால் கேரளத்தின் அழகை கண்களுக்கு குளிர்ச்சியான விருந்தாக்கியிருக்கிறார். கடந்த கால நாளில் நாம் கடந்து வந்தவற்றில் ஏதேனும் ஒரு நினைவை, படத்தின் ஏதேனும் ஒரு காட்சி நிச்சயம் நம்மை மெய்சிலிர்க வைக்கும் அளவுக்கு  உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜோ.ஹரிஹரன்.

மொத்தத்தில் "ஜோ" திரைப்படம் நம் கடந்த கால கல்லுரி வாழ்கையை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.
 
Edited By: Sugapriya Prakash