திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J. Durai
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (19:03 IST)

சமகால அவலங்களை பேசும் பராரி படத்தின் முதல் பார்வை!

இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் பராரி படத்தின் முதல் பார்வை வெளியானது.


'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.

'பராரி' என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர். திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின்  வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது.

சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால  அவலங்களை  இந்தப் படம் பேசுகிறது. சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும்  இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன் படப்புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சுமார் ஆறுமாத காலம் நடிப்புப் பயிற்சி பெற்ற புதுமுகங்கள் பலரும் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.

பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர்  இப்படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்), 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', NGK, 'தங்கலான்' போன்ற பல திரைப்படங்களின் அற்புதமான பாடல் வரிகளை இசை ஆர்வலர்களுக்குப் பரிசளித்த உமா தேவி இப்படத்திற்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

ஏ.ஆர். சுகுமாரன் பிஎஃப்ஏ (கலை),  எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலி கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு),  ஜி.முத்துக்கனி (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

 Edited By: Sugapriya Prakash