1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:47 IST)

வேலைக்காரன் - திரைவிமர்சனம்!!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கியிருக்கும் படம் வேகைக்காரன். இவர்களோடு பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, விஜய் வசந்த், ரோபோ சங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ஒய்.ஜி.மகேந்திரன், ராஜேந்திரன், சார்லி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 
 
சென்னையில் உள்ள குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கொலைகார குப்பம் என பெயர் பெற்ற அந்த குப்பம் பிரகாஷ் ராஜ் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரகாஷ் ராஜ்-ன் பேச்சை கேட்டு குப்பத்து மக்கள் கொலை, ரவுடிடிசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
சிவகார்த்திகேயனின் நண்பனான விஜய் வசந்த், பிரகாஷ் ராஜ் உடன்  இருந்து அவர் சொல்வதை செய்து வருகிறார். சிவகார்த்திகேயன் தனது குப்பத்தின் நிலையை மாற்ற, குப்பத்து மக்களை நல்ல நிலைக்கு சரியான பாதையில் கொண்டுவர முயற்சி செய்கிறார். 
எனவே, அவர் வாழும் குப்பத்திற்கு மட்டும் கேட்கும் எப்எம் ஒன்றை வடிவமைக்கிறார். அதில் குப்பத்து மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதனி அவர்கள் மூலமாகவே சரி செய்து அவர்களை தொழில் செய்ய வைக்கிறார். 
 
இது ஒரு பக்கமிருக்க தனது குடும்ப கஷ்டத்தால் பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார். அங்கு பகத் பாசிலை சந்தித்து அவரிடம் தொழில் கற்றுக்கொள்கிறார். அதன் பின்னர், தனது நண்பர் விஜய் வசந்தையும் அங்கு வேலைக்கு சேர்த்துவிடுகிறார். 
 
ஒரு கட்டத்தில் விஜய் வசந்த கொலை செய்யப்படுகிறார். இதற்கான காரணம் பிரகாஷ் ராஜ் என நினைக்கும் சிவகார்த்திகேயனுக்கு பல திருப்பங்கள் காத்துக்கிடக்கின்றன. அது என்ன திருப்பங்கள்? மக்களுக்கு நல்ல செய்தாரா சிவகார்த்திகேயன்? வேலைக்காரனாக வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.
 
ஹீரோயிசம் இன்றி சாதாரண குப்பத்து இளைஞனாக சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருக்கிறார். இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன் முறையாக இப்படத்தின் மூலம் சீரியஸ் அவதாரம் எடுத்துள்ளார். அவரது இயல்பான நடிப்பு ஸ்கோர் செய்கிறது. 
 
செகெண்ட் ஹாஃபில் வந்தாலும், பகத் பாசில் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிரது. அவரது நடிப்பு புயலுக்கு பின் அமைதி என்பதை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. நயன்தாரா வழக்கம் போல் நடிப்பில் அசத்தியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கும் இவருக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் இவர்களது காட்சிகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது. 
 
ரவுடியாக வந்தது பிரகாஷ் ராஜ் மிரட்டி செல்கிறார். சினேகாவுக்கு இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். விஜய் வசந்த்தின் நடிப்பு பேசும்படியாக இருக்கிறது. படத்தின் நடுவே ரோபோ சங்கர் அவ்வப்போது வந்து காமெடியில் சிரிக்க வைக்கிறார். 
 
தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கின்றனர். சார்லி, ரோகிணி ஆகியோர் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 
 
மோகன் ராஜா இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தனி ஒருவனாக, ஒரு வேலைக்காரனாக மோகன் ராஜாவின் கதையும், திரைக்கதையும் படத்தை முன்னெடுத்து செல்கிறது. 
 
பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசையில் அனிருத் பட்டைய கிளப்பியிருக்கிறார். 
 
மொத்தத்தில் வேலைக்காரன், வேலைக்காரர்களின் உழைப்பின் வெற்றி.