செக் மோசடி வழக்கில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வந்த ராம்கோபால் வர்மா அதன் பின்னர் திசை மாறினார். பி கிரேட் படங்களை எல்லாம் எடுக்க ஆரம்பித்தார். இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.
அதே போல சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையாவது வாடிக்கையாகிவிட்டது. பாகுபாடின்றி அனைவரையும் காரசாரமாக விமர்சிப்பவர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் கூட கேம்சேஞ்சர் படத்துக்காக ஷங்கரை நக்கல் செய்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இப்போது ராம்கோபால் வர்மா செக் மோசடி வழக்கு ஒன்றில் மூன்று மாதம் சிறை தண்டனைப் பெற்றுள்ளார். மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றம் சொல்லும் தொகையை செலுத்தாவிட்டால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாகப் பேசியுள்ள ராம்கோபால் வர்மா “இது என்னிடம் வேலை செய்த ஒருவரின் தவறால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு. இது சம்மந்தமாக என்னுடைய வழக்கறிஞர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள்” எனக் கூறியுள்ளார்.