கலைஞானத்திற்கு சொந்த வீடு: ரஜினிகாந்த் அளித்த உறுதி
பிரபல தயாரிப்பாளரும், ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், ஹீரோவாகவும் ஆக்கியவருமான கலைஞானம் அவர்களுக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் பாரதிராஜா, ரஜினிகாந்த், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
எனக்கு முதலில் ஹீரோ ஆகும் ஆசையே இல்லை. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் ஹீரோவாக நடிக்கும்போது எனக்கு அந்த தகுதியே இல்லை என்றுதான் நினைத்தேன். வில்லனாக நடித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பைக், வீடு என சந்தோஷமாக இருக்க நினைத்தேன்
அப்போதுதான் கலைஞானம் அவர்கள் என்னை திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ஹ்டார். வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன்; அந்த படம் தான் 'பைரவி'. பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பட்டம் வேண்டாம் என நான் தாணுவிடம் தெரிவித்தார். ஆனால் அவர் கிரேட் என்ற வார்த்தையை மட்டும் எடுத்து விடுகிறேன். சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது கலைஞானம் அவர்களின் கதையால்தான்
கதாசிரியர் கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கும் தகவல் இப்போதுதான் தெரியும். அதை தெரிந்தவுடன் எனக்கு வருத்தமாக உள்ளது. நான் எப்போது அவரை விசாரித்தாலும் அவர் நன்றாக இருக்கின்றேன் என்று இழுத்து சொல்வார். அதனால் எனக்கு அவர் கஷ்டப்பட்டது தெரியாமலேயே போய்விட்டது.
கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய அமைச்சருக்கு நன்றி. தமிழக அரசு அவருக்கு வீடு தருகிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் கதாசிரியர் கலைஞானத்திற்கு நானே வீடு வாங்கித் தருகிறேன்
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்