1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (12:13 IST)

தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் திடீர் உண்ணாவிரதம்: ரஜினியின் மெகா பிளான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கூறினார். அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அதில் நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். இந்த ரஜினி மக்கள் மன்றம் கூடிய விரைவில் அரசியல் கட்சியாக மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டில் தேர்தலை சந்திக்க அவர் தயார் நிலையில் இருப்பதாகவும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தயாராகி விட்டதாகவும் பிரச்சார கூட்டம் குறித்த யுக்திகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ரஜினியை அவ்வப்போது நேரில் சந்தித்து அரசியல் ஆலோசனை கூறி வரும் அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியபோது ’தேர்தல் பிரச்சாரங்களில் ரஜினிகாந்த் பல்வேறு யுக்திகளை கடைபிடிப்பார் என்றும் அவை அனைத்தும் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் கடைபிடிக்காத யுக்திகளாக இருக்கும் என்றும் கூறினார் 
அதுமட்டுமின்றி தேர்தல் வாக்குப் பதிவுக்கு 48 மணிநேரத்துக்கு முன்னர் கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை மேல் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருப்பார் என்றும் அந்த உண்ணாவிரதத்தில் மக்கள் தயவு செய்து காசு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்றும், ஜாதி மதம் பார்த்து ஓட்டு போட வேண்டாம் என்றும், அனைத்து மதத்திற்கும் அனைத்து ஜாதிக்கும் பொதுவாக இருக்கும் ஆன்மீக அரசியலுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றும் அவர் வலியுறுத்துவார் என்று கூறினார் 
 
இந்த உண்ணாவிரதம் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க வாய்ப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த அரசியல் விமர்சகர் இவ்வாறு பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இவை நடைமுறையில் சாத்தியமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்