திருப்பூர் பின்னணியில் உளவியல் ரீதியாக தற்கொலை... ‘முள்ளில் பனித்துளி’

papiksha| Last Updated: வியாழன், 13 பிப்ரவரி 2020 (11:34 IST)

டிரென்ட்ஸ் மூவிஸ் சார்பில் புதுமுக தயாரிப்பாளர் ந.ம.ஜெகன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘முள்ளில் பனித்துளி’. இந்தப்படத்தில் ‘யாரடி நீ மோகினி’,‘ கேளடி கண்மணி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வினிதா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இவருடன் புதுமுகம் நிஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு தீலிப் ராமன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக
இசை அமைப்பாளர் பென்னி பிரதீப் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ந.ம.ஜெகன். படத்தை பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெகன் பேசுகையில்,

“திருப்பூர் பின்னணியில் பெண்கள் படும் துயரங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல்களைப் பற்றியும் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகியிருக்கிறது முள்ளில் பனித்துளி. நடுத்தர குடும்பங்களில் யதார்த்தமான வாழ்வியலை வணிக சினிமா வரையறைக்கும் உட்படாமல் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறேன். தற்கொலை குறித்து சமூகம் கொடுக்கும் அழுத்தங்களை உளவியல் ரீதியாகவும், பாலியல் சுரண்டல் நடைபெறும் போது அதனை எதிர்கொள்வது குறித்த விஷயங்களும் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது.

எனக்கு ஏற்றுமதி தொழிலை தவிர திரைப்படங்களை இயக்குவதில் விருப்பம் இருந்தது. அத்துடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை சினிமா போன்ற வலிமையான ஊடகத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக முள்ளில் பனித்துளி என்ற திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தேன். தயாரிப்பில் ஈடுபட்ட உடன் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் இருந்தேன். கதையின் நாயகி வினிதா அவர்களைத் தவிர படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலனவர்கள் புதுமுகங்களே. அவர்களுக்கு 15 நாட்களுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே படபிடிப்பைத் தொடங்கினோம்.
இந்த திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறது. பாடலை எழுதியவர்களும்,பின்னணி பாடியவர்களும், இசையமைத்தவரும் புதுமுகங்கள் தான்.
திருப்பூர், பொங்கலூர், சென்னை என பல இடங்களில் 31 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப பெற்றிருக்கிறது.விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :