குறிவைக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்: என்ன செய்யப்போகிறார் விஷால்?
விஷால் தயாரிப்பாளர்கள் சங்க பதவியில் ஒன்றும் செய்வதில்லை என்றும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க பதவி ஏற்றுக்கொண்ட இத்தனை காலக் கட்டத்தில் சங்கத்திற்காக ஒன்றும் செய்யவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அவர் சிறுபட தயாரிப்பாளர்களுக்கு எந்த உதவியையும் செய்வதில்லை எனக் கூறி சமீபத்தில் தயாரிப்பாளர்களும் நடிகர்களுமான உதயாவும், ஆர்.கே.சுரேஷும் சங்கத்திலிருந்து வெளியேறினார்கள்.
தலைவர் விஷாலோ, துணைத்தலைவர்கள் கொளதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் தயாரிப்பாளர் சங்க பிரச்சனைகளில் தலையிடாமலும் ஆபிஸுக்கே வராமலும் இருப்பதால், விஷால் உடனடியாக பதவி விலகி, தேர்தலை அறிவிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் தான் இந்த பதவிக்கு வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாளுக்கு நாள் அவர் மீதான எதிர்ப்புகளும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது. இதற்கு விஷால் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.