திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (09:19 IST)

ஒருத்தர கேவலப்படுத்தி சிரிக்கிறது மனநோய்! – “நீயா நானா” குறித்து பிரபல நடிகை ட்வீட்!

Neeya Naana
நேற்று “நீயா நானா” நிகழ்ச்சியில் இடம் பெற்ற தந்தை, மகள் வீடியோ வைரலானதை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி சங்கர் அதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் நடைபெறும் பிரபலமான விவாத நிகழ்ச்சி “நீயா நானா”. பல்வேறு தலைப்புகளில் மக்களின் எண்ணங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார்.

நேற்று இந்த நிகழ்ச்சியில் கணவர்களை விட அதிக சம்பளம் பெரும் மனைவிகளுக்கும், அவர்களது கணவர்களுக்குமான விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒருவர் தான் முட்டை வியாபாரம் செய்து நொடித்து விட்டதாகவும், அதனால் தனது மனைவி மற்றும் அவரது வீட்டார் மதிப்பதில்லை என்றும் பேசினார்.


எதிர்தரப்பில் இருந்த அவரது மனைவி அவருக்கு படிப்பறிவு இல்லாததை இகழ்ந்து பேசியபோது, அந்த நபர் தனது மகளை படிக்க வைக்க விரும்புவதை மெச்சிய கோபிநாத் நிகழ்ச்சி முடியும் முன்னரே அந்த நபருக்கும், அவரது மகளுக்கும் பரிசை அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பதிவிட்டுள்ள பிரபல நடிகை ப்ரியா பவானி சங்கர் ” ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்தின் இந்த செயலை பலரும் வெகுவாக பாராட்டி சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.