வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (12:15 IST)

பணத்துக்காகதான் நடிக்க வந்தேன்..! சர்ச்சையான பேச்சு! – ப்ரியா பவானி சங்கர் விளக்கம்!

பிரபல தமிழ் நடிகை ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அதுகுறித்து விளக்கமளித்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ளவர் ப்ரியா பவானி சங்கர். ‘மான்ஸ்டர்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ‘இந்தியன் 2’ உள்ளிட்ட முக்கியமான படங்களிலும் நடித்து வருகிறார்.

செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ப்ரியா பவானி சங்கர், பின்னர் டிவி சீரியல்களில் நடித்து தற்போது திரை நடிகையாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது, நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது இல்லை என்றும், அதிக பணம் கிடைத்ததால் நடிக்க வந்ததாகவும் கூறியிருந்தார்.

இதை குறிப்பிட்டு பலரும் அவரை பல்வேறு வகையில் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்குறித்து அவதூறு பேச்சுகள் எழுந்த நிலையில், இதுகுறித்து தற்போது அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “என்னை குறித்து வரும் இந்த அவதூறுகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். மாப்ள சொம்பு கொடுத்தாதான் தாலி கட்டுவாறாம் என்ற மனநிலையில் மீடியா தளங்கள் இதை பெரிதுப்படுத்தி வருகின்றன. நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? அனைவருக்கும் பணத்திற்காகதான் பணி புரிகிறோம். ஆனால் அதை ஒரு நடிகை சொன்னால் ஏன் கேவலமாக தோன்றுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒருநபரை கீழே தள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டாம் என்றும், தான் தனது வழியில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், யாரையும் சிறுமைப்படுத்தியது கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K