ரஜினி சார் காமெடி சென்ஸ் பத்தி யாரும் பேசல..! – நடிகர் பிருத்திவிராஜ்!
தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் காமெடி சென்ஸ் குறித்து அவ்வளவாக யாரும் பேசவில்லை என நடிகர் பிருத்விராஜ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் இரண்டு ஸ்டார் நடிகர்களாகவும், 80களில் இருந்தே அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பவர்களுமாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட போட்டிகள், மோதல்களை இன்றுமே பழைய ரசிகர்கள் சொல்லி கேட்கலாம்.
ரஜினிகாந்த் ஆக்ஷன் ஹீரோவாய் கலக்கி வந்த நிலையில் கமல்ஹாசன் பல்வேறு வகையான படங்களையும் நடித்து வந்தார். அடிக்கடி நகைச்சுவை படங்கள் சிலவும் நடிப்பார். ரஜினிகாந்த் முழு காமெடி படமாக “தில்லு முல்லு” போன்ற சில படங்கள் நடித்துள்ளார். இதுதவிர அவரது ஆக்ஷன் படங்களிலுமே கூட குழந்தைகளை கவரும் விதமாக சில காமெடிகளை செய்வார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் குறித்து பேசிய நடிகர் பிருத்திவிராஜ் “கமல் சாரின் காமெடி சென்ஸ் பற்றி பலருக்கும் தெரியும். பஞ்சதந்திரம் போன்ற படங்களில் அவரது நகைச்சுவைதன்மை சிறப்பாக இருக்கும். ஆனால் ரஜினி சாரின் நகைச்சுவைத்தன்மை குறித்து அவ்வளவாக யாரும் பேசியது இல்லை. ரஜினி சாருக்கு சிறந்த காமெடி சென்ஸ் உள்ளது” என்று கூறியுள்ளார்.