புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 4 ஜனவரி 2020 (18:23 IST)

“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் !

சிறிது காலமாக சிம்பு பட அப்டேட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் அவரது ரசிகர்கள். இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும்  “மகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  சிம்புவின் அதிரடி தோற்றத்தில் வெளியானது, அவரது ரசிகர்களை  உற்சாகத்தின் உச்சாணி கொம்பில் அமர்த்தி வைத்திருக்கிறது. 
 
ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்புவின் தோற்றம்,  வெளியான நொடியிலிருந்தே  பரபரப்பாய் பகிரபட்டு வருகிறது.  “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ஜமீல் படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
 
இது குறித்து இயக்குநர் ஜமீல் கூறியதாவது, எல்லோரும் “மஹா” படத்தில் சிம்பு ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முழுமையான உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றம் தான் என்றாலும், அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியமானது, கதையில் அவரது கதாப்பாத்திரம் ஃபிளாஸ்பேக் பகுதியில் 45 நிமிடங்கள் வரக்கூடிய பெரிய பாத்திரம் ஆகும். அவர் ஒரு பைலட்டாக நடித்திருக்கிறார். நிஜத்தில் கோவாவில் 30 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த பைலட்டுக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவரது கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
நாங்கள் அந்த கதாப்பாத்திரத்தை மிகுந்த கவனத்துடன் மெருகேற்றி உருவாக்கியுள்ளோம். அவரது கதாப்பாத்திரம் பல ஆச்சர்யங்கள் கொண்டிருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் “ஜமீல்”. என்னுடைய பெயரை விளம்பரப்படுத்தும் பொருட்டு இப்படி வைத்திருக்கிறேன் என தப்பாக நினைத்து விடாதீர்கள். முதலில் அவரது ரோலுக்கு “சாஹிப்” என்று தான் பெயர் வைத்திருந்தோம் ஆனால் அந்தப்பெயர் மிகவும் வழக்கமான பெயராக இருப்பதாக படக்குழு கருதியதால் இந்தப்பெயரை முடிவு செய்தோம் என்றார்.
 
மேலும் நடிகர் சிம்புவுடன் பணிபுரிந்தது குறித்து அவர் கூறியபோது, இப்படி ஒரு கச்சிதமான நடிகரை நான் பார்த்ததேயில்லை. தமிழ் சினிமவில் மிக முக்கிய ஆளுமையாக, மிக பிரபல நடிகராக இருந்தும், அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு டேக்கிலும் “இது ஓகேவா, இன்னொரு முறை போகலாமா” என எந்த ஒரு அலட்டலும் இன்றி கேட்டுக்கொண்டே இருந்தார். தான் பங்கு கொள்வதில் கச்சிதத்தை கடைப்பிடிப்பவராக இருந்தார். படப்பிடிப்பு  தளத்தில் முதல் ஆளாக இருப்பார். எப்போது வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு நேரம் தவறாமல் முதல் ஆளாக அங்கு இருந்தார். படப்பிடிப்பில் வெகு சிரத்தையுடன் அமைதியாக இருந்தார். அவரது பங்கு எங்கள் படத்தை மேலும் பல படிகளுக்கு எடுத்து செல்லும். ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அதனை உறுதி செய்து எங்களை உற்சாகமூட்டியிருக்கிறது என்றார்.