1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (13:57 IST)

அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் - ‘பேச்சி’ பட விழாவில் நடிகர் பாலசரவணன் பேச்சு!

வெயிலோன் எண்டர்டெயின் மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ்  சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
 
பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ்  நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில்,மூத்த பத்திரிகையாளர்கள் தேவி மணி மற்றும் மக்கள் குரல் ராம்ஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.
 
இந் நிகழ்வினில்
நடிகர் முரளி ராம் பேசுகையில்.......
 
இத்தனை கேமராக்கள் எங்கள் நிகழ்ச்சியை கவரேஜ் செய்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு படம் பெஞ்ச் மார்க் படமாக அமையும். அதாவது, ‘மைனா’, ‘பீட்சா’ என இப்படி வெற்றி பெற்ற படங்களை திரும்ப பார்த்தோம் என்றால் அந்த படங்கள் அனைத்தும் நண்பர்கள் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தான் இருக்கும். அந்த வரிசையில் ‘பேச்சி’ படமும் இடம் பிடிக்கும்.  இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய மனதோடு பணியாற்றினார்கள், ஒவ்வொருவரும் தங்களது சொந்த படம் போல வேலை பார்த்தார்கள். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என்பதற்காக நானே கேட்டு தான் சேர்ந்துக் கொண்டேன். நான் இரண்டு நாட்கள் பணியாற்றினேன். இயக்குநர் ராமச்சந்திரன் சார், வங்கியில் நல்ல பதவியில் இருந்தார், ஆனால் சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு, சினிமாத்துறைக்கு வந்திருக்கிறார். அதேபோல், அவரது குடும்பத்தாரும் அவரது ஆசையை புரிந்துக்கொண்டு அவரை இந்த துறைக்கு அனுப்பி வைத்தார்கள். நிறைய விளம்பர படங்களை செய்தார். இப்போது படம் பண்ண வந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர், கோகுல் பினாய் என அனைவருமே அவரிடம் இருந்து வந்தவர்கள், அவரது தம்பிகள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல், அனைத்து தம்பிகளும் சேர்ந்து அண்ணனுக்காக இந்த படம் பண்ணியிருக்கிறார்கள். அவர்களது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். படத்தை வெளியிடும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 
நடிகர் ஜனா பேசுகையில்......
 
பேச்சி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் வித்தியாசமான ஒரு திகில் திரைப்படமாக இருக்கும். திரையரங்குகளில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும், நிச்சயம் ரசிகர்கள் படத்தை எஞ்சாய் பண்ணுவார்கள், நன்றி என்றார்.