1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (21:32 IST)

படைவீரன்: திரைவிமர்சனம்

மாரி படத்தில் வில்லனாக திரையுலகிற்கு அறிமுகமான விஜய் யேசுதாஸ், முதல்முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் எப்படி? என்பதை தற்போது பார்ப்போம்

ஊரில் வேலைவெட்டி இல்லாமல், நான்கு நண்பர்களுடன் ஊர்வம்பை இழுத்து அடிதடியில் இறங்குவது தான் விஜய்யேசுதாசின் அன்றாட வேலை. சொந்தக்கார பெண் அம்ரிதாவை பெண் பார்க்க வருபவர்களை கிண்டல் செய்து அவரது திருமணத்தை நிறுத்தியும் வருகிறார். இந்த நிலையில் திடீரென விஜய் யேசுதாசுக்கும் அமிர்தாவுக்கும் காதல் உண்டாகிறது.

அப்போது விஜய் யேசுதாசின் மாமா பாரதிராஜா, விஜய் யேசுதாசுக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். போலீஸ் டிரெயினிங் முடிந்தபின்னர் அவருடைய ஊரில் ஜாதிக்கலவரம் நடப்பதாகவும், அந்த கலவரத்தை கட்டுப்படுத்த விஜய் யேசுதாஸ் டீம் போக வேண்டும் என்றும் ஆர்டர் கொடுக்கப்படுகிறது. ஜாதிக்கலவரத்தை தடுக்க சொந்தபந்தங்களையே அடிக்கவும், கைது செய்யவும் வேண்டிய நிலை வருகிறது. இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க விஜய் யேசுதாஸ் எடுத்த முடிவு என்ன? என்பதுதான் படைவீரன் படத்தின் மீதிக்கதை

ஹீரோவாக விஜய் யேசுதாஸ் தேறி விடுகிறார். முதல் பாதியில் லுங்கியும், இரண்டாவது பாதியில் மிடுக்கான போலீசாகவும் வந்து மனதை கவர்கிறார். காதல் காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும் நடிப்பு ஓகே ரகம். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நல்ல ஹீரோ கிடைத்துவிட்டார்.

நாயகி அமிர்தாவுக்கு துடுக்காண பெண் வேடம். தன்னை ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க மாப்பிள்ளை வருவதாக கூறி உறவினரிடம் தலை சீவி விடுமாறு கூறுவது கலகலப்பு. ஆனால் முதல் பாதி முழுவதும் நாயகனை வெறுத்து வந்த அம்ரிதா திடீரென காதலிப்பதாக கூறுவதற்கு சரியான காரணம் கூறவில்லை

இயக்குனர் பாரதிராஜா ஒரு எக்ஸ்சர்வீஸ்மேன் கேரக்டரில் வருகிறார். கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்றாலும் இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் இன்றைய நாட்டின் நிலையை தோலிரித்து காட்டுவதாக அமைந்துள்ளது.

கார்த்திக் ராஜாவின் இசையில் தனுஷ் பாடிய 'லோக்கல் சரக்கா ஃபாரின் சரக்கா' என்ற பாடல் மட்டும் ஓகே. ராஜவேல் மோகனின் கேமிரா கிராமத்தை அழகை மிக அழகாக படம் பிடித்துள்ளது. மொத்தத்தில் இந்த படைவீரன், மனதில் நிற்கும் பாசமான வீரன் தான்

ரேட்டிங்: 3.25/5