வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 23 மே 2024 (15:06 IST)

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

<img style="border: 1px solid #DDD; margin-right: 10px; padding: 1px; float: left; z-index: 0;" class="imgCont" src="https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-05/23/full/1716457210-05.jpg" align="" title="MGR-Shivaji's result is the reason" 'samanian'="" ramarajan"="" width="740" height="417" alt="">
எண்பதுகளின் இறுதியில் தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்துவந்த மக்கள் நாயகன் ராமராஜன் 14 வருடங்களுக்கு பிறகு நடித்துள்ள படம் ‘சாமானியன்’. அவரது 45வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை  எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்துள்ளார். 
 
தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய  படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்.
 
கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 
இன்று (மே-23) இப்படம் ரிலீசாகியுள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட ‘சாமானியன்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
 
இந்த நிகழ்வில்,
 
கதாசிரியர் கார்த்திக் குமார் பேசும்போது, “இங்கே அங்கீகாரம் அழிக்கப்படலாம். ஆனால் அடையாளம் அழிக்கப்பட கூடாது. ஆனால் என்னுடைய அடையாளம் அழிக்கப்படுகிறது. 2015ல் நடந்த உண்மை சம்பவத்தை, பல அவமானங்களுடன் அதைக் கடந்து வந்து இழப்புகளை சந்தித்து, நான் நேரில் அனுபவித்த வலியை, மையப்படுத்தி ஒரு கதையாக உருவாக்கி தயாரிப்பாளர் மதியழகனிடம் கூறினேன். இந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்த நிலையில் கதை, திரைக்கதை, வசனம் என இருந்த என் பெயரில் திரைக்கதை, வசனம் என ஒவ்வொன்றாக பறிபோய் இப்போது கதை என்று மட்டுமே என் பெயர் ஒரு மூலையில் இருக்கிறது. எதற்குமே நான் ரியாக்ட் பண்ணவில்லை. இப்போது அதுவும் பறிபோகின்ற ஒரு சூழல் இருக்கிறது. பல பிரச்சினைகளை கடந்து இந்த படம் வெளியாகின்ற சூழலில் கூட இந்த படத்தின் கதை எங்களுடையது என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இயக்குநர்கள் பாக்கியராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர் கே செல்வமணி போன்றவர்கள் அப்படி புகார் அளித்தவர்களின் கதைக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆணித்தரமாக கூறி கடிதமே அளித்து விட்டனர். 
 
இந்த படத்தில் ராமராஜனின் கதாபாத்திர பெயரான சங்கர நாராயணன் என்பது எனது தாத்தாவின் பெயர். இந்த படத்தில் இடம்பெறும் சரஸ்வதி நிலையம் என்பது 2016ல் நான் வாங்கிய வீட்டிற்கு வைத்த பெயர். இதில் நடித்த ஒரு சில கதாபாத்திரங்களின் பெயர் கூட என்னுடைய நெருங்கியவர்களின் கதாபாத்திரங்கள் தான். இந்த படத்தில் பணியாற்றியதால் நான் பல விஷயங்களை இழந்தேன். ராமராஜன் சாரை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்தேன்.. அதையும் பாதியில் தடுத்து விட்டார்கள். ஆனால் இந்த சாமானியன் என்கிற குழந்தையின் தகப்பன் நான் தான் என்கிற அடையாளத்தை அழிக்க முடியாது. நேற்று இந்த படத்தை பார்த்த 140 பிரபலங்கள் ஒவ்வொரு வசனத்திற்கும் கைதட்டுகிறார்கள். 13 நாட்களில் நான் அதை எழுதி முடித்தேன்” என்றார். 
 
நாயகன் ராமராஜன் பேசும்போது, “இப்படி என்னுடைய படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுதான் எனது திரையுலக பயணத்தில் முதல் முறை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்து இன்று இந்த சாமானியன் என்கிற படத்தின் மூலம் திரும்பி வந்திருக்கிறேன். அந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜாவை தயாரிப்பாளர் கொண்டு வந்து சேர்த்தது மிகப்பெரிய சந்தோஷம். சினிமாவை விட்டு இத்தனை வருடங்களாக ஒதுங்கவில்லை. நல்ல கதைக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். முன்பு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் பாணியில் சிவாஜியையும் சிவாஜி பாணி படத்தில் எம்.ஜி.ஆரையும் நடிக்க வைக்க ஆலோசனை கூறினார்கள். ஆனால் அப்படி எம்ஜிஆர் நடித்த பாசம், சிவாஜி நடித்த தங்கச் சுரங்கம் என இரண்டு படங்களுமே வரவேற்பு பெறவில்லை. அதன் பின்னர் அவரவருக்கு ஏற்ற கதையிலேயே நடியுங்கள் என்று கூறி விட்டார்கள். அப்படி எனக்கு எந்த கதை சரியாக இருக்கும் என மக்கள் ஒத்துக் கொள்கிறார்களோ அதே வழியில் தான் நான் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்திருக்கிறேன். 
 
86 லிருந்து 90 வரை நான்கு வருடங்கள் மட்டுமே பீக்கில் இருந்த ராமராஜனை இன்று வரை மக்கள் மனதில் நினைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இசைஞானி இளையராஜா என் படங்களில்  சாதாரண மக்களையும், உழைக்கும் வர்க்கத்தையும் தொடும் விதமாக அமைத்த பாடல்கள் மட்டும் தான் காரணம். அவை தான் மக்களிடம் இப்போதும் என்னை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இத்தனை வருடங்கள் கழித்து வரும்போது என்னை ரசிக்கும் ரசிகர்களுக்கும், அதே சமயம் இப்போதுள்ள தலைமுறைக்கும் ஏற்றுக்கொள்ளும் விதமாக ஒரு கதையும் கதாபாத்திரமும் அமைந்ததால் சாமானியன் படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன்.
 
டூரிங் டாக்கீஸ் காலத்திலிருந்து படங்களை பார்த்து வருபவன் என்பதால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இடைவேளை காட்சி போல வேறு எந்த படத்திலும் இதுவரை வந்ததில்லை என்று உறுதியாக சொல்வேன். இந்த படத்தில் பாடல் காட்சிகளுக்கு இடம் இல்லை என்றாலும் கூட இசைஞானி இளையராஜா தானாகவே ஒரு சிச்சுவேஷனை உருவாக்கி அருமையான ஒரு பாடலை கொடுத்துள்ளார். படத்திற்கு அட்வான்ஸ் எதுவும் வாங்காமலேயே பின்னணி இசை கோர்ப்பு பணிகளை ஆரம்பித்து விட்டார் இசைஞானி. அப்போது என்னை ஒருநாள் அழைத்து பின்னணி இசையுடன் படத்தை போட்டு காட்டியபோது, “ஏண்ணே. கரகாட்டக்காரனுக்கு போடுகின்ற மியூசிக் மாதிரியா இருக்கு. ஏதோ இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு” என்று அவரிடம் கூறினேன்.
 
இத்தனை வருடங்களில் ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என பத்திரிகைகள் எழுதி எழுதி கடைசியில் எனக்கு ஹீரோ வாய்ப்பே தேடி வந்தது எத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என நாம் உருவாக்கிக் கொடுத்தோமே.. ஆனால் நாம் 44 படம் நடித்ததோடு அப்படியே நிற்கிறதே.. ஒருத்தர் கூட நம்மை தேடி வரவில்லையே.. சினிமாவில் நமக்கு 144 போட்டு விட்டார்கள் போல என்று நினைத்தேன்.. ஆனால் 45 வது படமாக இது அற்புதமாக அமைந்து விட்டது” என்று கூறினார்..
 
இயக்குநர் ஆர்.ராகேஷ் பேசும்போது, “ராப்பகலாக உழைத்து பல நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களை ஒன்றிணைத்து இப்படி ஒரு அருமையான படத்தை ரிலீஸுக்கு கொண்டு வரும் சமயத்தில் பல பேர் இது என்னுடைய கதை என்று கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் படம் அதற்கு பதில் பேசும்.. இங்கே பெரும்பாலும் கடன் இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள். எல்லாரும் வாழ்க்கையிலும் இருக்கும் கதை தான் இது.. பொதுவான விஷயத்திற்கு தனிப்பட்ட முறையில் எவனும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதை தான் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் சங்கம் இப்போது எங்கள் படத்திற்கான தீர்ப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது” என்று கூறினார்.