யார் அந்த பிரகாஷ்?… வைரலாகும் விடாமுயற்சி மீம்கள்.. பதிலளித்த மகிழ் திருமேனி!
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. படத்தில் அஜித்தோடு த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க, லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார்.
இரண்டாண்டுகள் தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்க்க முடியாத ஏக்கத்தை கொண்டாடித் தணித்தனர். வழக்கத்துக்கு மாறாக அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்துள்ளார் என்று பாராட்டுகள் எழுந்தாலும், படத்தில் சுவாரஸ்யம் என்பது மருந்துக்கும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் முதல் நாளுக்குப் பின்னர் படிப்படியாக வசூல் வீழ்ச்சியடைந்தது.
படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த கயல் கதாபாத்திரம் பிரகாஷ் என்பவரோடு திருமணம் தாண்டிய உறவில் இருக்கும். ஆனால் படம் முழுவதும் அந்த பிரகாஷ் காட்டப்பட்டிருக்க மாட்டார். இந்நிலையில் ரசிகர்கள் யார் அந்த பிரகாஷ் என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு ஒரு நேர்காணலில் பதிலளித்துள்ளார் மகிழ் திருமேனி.
அதில் “பிரகாஷ் கதாபாத்திரம் யார் என்பது தேவையில்லாதது? அந்த கதாபாத்திரம் கதையில் ஒரு சிறு சம்பவம். அது இல்லாவிட்டாலும் கதை நகரும். அதனால் அதைப் பற்றி ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.” எனக் கூறியுள்ளார்.