மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக்… இயக்குனர் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்!
கடந்த ஆண்டு வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.
இதனால் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இப்போது மாநாடு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு ரீமேக்கை தமிழில் இயக்கிய வெங்கட்பிரபுவே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் மாநாடு ரீமேக்கை இயக்குவார் என சொல்லப்படுகிறது.