லிங்குசாமியின் அடுத்த படத்தில் நானா? பதறிய முன்னணி ஹீரோ!
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத தோல்வி படமாக அமைந்தது அஞ்சான். அதன் பின்னர் அவர் இயக்கிய சண்டக்கோழி 2 திரைப்படமும் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை.
இதையடுத்து தற்போது அவர் இயக்கியுள்ள தி வாரியர் திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியானது. ஆனால் சொல்லிக்கொள்ளும் படியான வரவேற்புப் படத்துக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தை பற்றி ரிலீஸூக்கு முன்பே நேர்மறையான தகவல்கள் பரவியதால் சூர்யா மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, அவரிடம் கதை கேட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது அப்படி எதுவும் நடக்க சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் சூர்யா தரப்பினர் இது சம்மந்தமாக பல ஊடகங்களுக்கும் சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவில்லை என்று தாமாகவே முன்வந்து சொல்லுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.