பிரம்மாண்டமாக திட்டமிடப்படும் மாநாடு 100 ஆவது நாள் விழா… வருவாரா சிம்பு?
மாநாடு படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.
இதனால் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டும் தொலைக்காட்சியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டும் இந்த படம் சென்னையில் ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. 100 ஆவது நாள் காட்சிக்கு சிம்பு வந்து ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தார். இந்நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த 100 ஆவது சாதனையை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என விரும்புவதாக தெரிகிறது. இதற்காக முன்னணி நடிகர்கள் பலரை அழைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் கதாநாயகன் சிம்புவுக்கும் அவருக்கு கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால் அவர் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.