எம்.ஜி. ஆரைக் கேள்வி கேட்டவர்; நாவல்களை சினிமா ஆக்கியவர் – மகேந்திரனுக்கு வைரமுத்து அஞ்சலி !
இயக்குனர் மகேந்திரன் இயறகை அடைந்துள்ளதை அடுத்து அவருக்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழ்சினிமா இயக்குனரான மகேந்திரனுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து தனது அஞ்சலிக் குறிப்பை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் மகேந்திரன் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் உருவாக்கிய தாக்கங்கள் குறித்தும், தனக்கும் மகேந்திரனுக்குமான உறவு குறித்து நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்துவின் அஞசலி
இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்துக்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.
‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையைத் தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன்.
‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்?’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது. ‘தங்கப் பதக்க’த்தில் அவர் எழுதிய `அழகான தவறு’ என்ற வசனம் சிவாஜியைப் போலவே மறக்க இயலாதது.
எனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்தார்.
புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.