ராவணனைத் தவிர வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க எனக்கு ஆசையில்லை… யாஷ் கொடுத்த அப்டேட்!
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் இதன் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் ரன்பீர் மற்றும் சாய்பல்லவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன்பின்னர் தற்போது அரங்கு அமைக்கும் பணிகளுக்காக தற்காலிக இடைவேளை விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து யாஷ் பேசியுள்ளார். இந்த கதையில் ராவணன் கதாபாத்திரம் தவிர்த்து வேறு எதிலும் நடிக்க தனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராவணக் கதாபாத்திரத்தின் பல்வேறு கோணங்கள் மற்றும் நுணுக்கங்கள் தனக்குப் பிடித்தமானவை என அவர் தெரிவித்துள்ளார்.